×

தமிழ்நாட்டில் திறமையான சமுதாயத்தை உருவாக்குவேன்!

நன்றி குங்குமம் தோழி

மதுரை கோசா குளம் பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி பவஸ்ரீ. இவர் இந்தாண்டு புதுதில்லியில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொள்ள தேர்வாகி இருக்கிறார். ‘‘எங்களுடையது மிகவும் சிறிய குடும்பம். அம்மா, அப்பா, நான் மற்றும் தங்கச்சிதான். அப்பா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அம்மா யோகா பயிற்சியாளர். தங்கை யுவஸ்ரீ, 6ம் வகுப்பு படிக்கிறார். அவரும் என்னைப் போல் ஜிம்னாஸ்டிக் மட்டுமில்லாமல் குத்துச் சண்டையும் பயிற்சி பெற்று வருகிறார்.

எனக்கு சின்ன வயசில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று விருப்பம். அதில் நான் ரொம்பவே உறுதியா இருக்கேன். அந்த வேலை மேல் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பினால் நான் என் தலைமுடியை கூட ராணுவத்தில் இருக்கும் பெண்களை போல்தான் கத்தரித்துக் கொள்வேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சேரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதே ஏன் முடியை வெட்டிக் கொள்கிறாய் என்று கேட்பார்கள்.

ஆனால் எனக்கு என்ன விருப்பமோ அதில்தான் ரொம்பவே தீவிரமாக இருக்கிறேன் என்று கூறிவிடுவேன். ராணுவத்தில் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்ற எனது சிறு வயது எண்ணமும் அதற்காக முடியை கத்தரித்துக் கொள்வது மட்டுமே போதாது, என் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஏதாவது ஒரு விளையாட்டு துறையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக நான் என் பெற்றோருடன் கலந்து பேசினேன்.

அம்மாவும் யோகா பயிற்சியாளர் என்பதால் வீட்டில் எல்லோரின் ஆரோக்கியத்தின் மேல் அம்மா தனி கவனம் செலுத்துவார். அதன் அடிப்படையில்தான் நான் நீச்சல் பயிற்சியினை தேர்வு செய்தேன். காலை, மாலை இரண்டு வேளையும் பயிற்சி எடுத்து என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது மட்டுமில்லாமல், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்றிருக்கிறேன்.

ஒரு முறை நீச்சல் பயிற்சியின் போது உடலில் ஏற்பட்ட சில பிரச்னைகளாலும், கொரோனா காலகட்டம் என்பதால், என்னால் சில காலம் வேறு எந்தப் பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை. ஆனால் எனக்கோ ஏதாவது ஒரு விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் என் மனம் உறுதியாக இருந்தது. அப்பா டாக்டரிடம் ஆலோசனை கேட்ட போது அவர் நீச்சல் பயிற்சியை தவிர வேற விளையாட்டினை தேர்வு செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டினார்.

ராணுவம் மற்றும் போலீஸ் துறைக்கான பயிற்சியாளரின் வழிகாட்டுதல் பேரில் களப்பயிற்சிகளை மேற்கொண்டேன். மேலும் பெண்களுக்கு இந்திய ராணுவத்தில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாலும் அதற்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அதிக அளவில் உதவும் என்பதால் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்’’ என்றவர் அதற்கான போட்டியில் பங்கு பெற்ற விவரங்களை பகிர்ந்தார்.

‘‘நான்கு மாத காலம் பயிற்சிக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்டேன். போட்டி யாளராக இல்லை பார்வையாளராக. காரணம், அப்போதுதான் அந்தப் போட்டியில் இருக்கும் சவால்களை புரிந்து ெகாள்ள முடியும். நான்கு மாதப் பயிற்சியில் இந்த சவால்களை மேற்ெகாள்வது அவ்வளவு சுலபமில்லை என்று எனக்கு தெரிந்தது. அதனால் அதிகமாக பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். அரசுப் பள்ளிக் கல்வி துறையால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபெற்று 3 பதக்கங்கள் வென்றேன். அதை தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் கலந்துகொண்டு பதக்கம் வென்றேன்.

இந்தாண்டு ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை பெற்றேன். என்னுடைய இந்த வெற்றிக்கு ராமச்சந்திரன் அவர்களும், பாபு அண்ணா மற்றும் பிரகாஷ் அவர்களும்தான் காரணம். இவர்களை தவிர நான் துவண்டு போகும் போது எல்லாம் எனக்கு ஊக்கம் அளிப்பவர்கள் என் பள்ளியின் நிறுவனத் தலைவர் ராஜா அவர்கள், தலைவர் சாமி ஐயா, துணைத் தலைவர்கள் ஜெயச்சந்திரபாண்டி, அசோகராஜ், முதன்மை முதல்வர் கலா அம்மா, முதல்வர் கெளரி அம்மா, உடற்கல்வி இயக்குனர் செல்ல முருகன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் தான். மேலும் என் உறவினர்கள் மற்றும் தோழிகளும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கொடுக்கும் ஊக்கம்தான் நான் ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணம்’’ என்றவர், போட்டியில் சந்தித்த மறக்க முடியாத சம்பவங்களை பற்றி விவரித்தார்.

‘‘நான் முதலாவது போட்டிக்காக சென்னை வந்திருந்தேன். போட்டியின் போது சகோதரி ஒருவர் நிலை தடுமாறிட்டார். அதனால் பெரும் காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து வெளியேறி னார். அதேபோல் மதுரையில் நடைபெற்ற போட்டியில் என் கண் முன்னால் போட்டியாளர்கள் பலர் உடலில் காயங்கள் ஏற்பட்டு சுருண்டு விழுவதை பார்த்தேன். ஜிம்னாஸ்டிக் மட்டுமில்லாமல், ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. அதிலும் பல போட்டியில் கலந்து ெகாண்டு பரிசு ெபற்றிருக்கேன். சிலம்பமும் கற்றுள்ளேன். இந்தாண்டு தேசிய அளவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்காக தகுதி சுற்றில் நான் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கேன்.

இது மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழகத்தின் பிரதிநிதியாக நான் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறேன். அதனால் கண்டிப்பாக இதில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த விளையாட்டை பொறுத்தவரை கவனம் மற்றும் நிதானம் அவசியம். கொஞ்சம் தவறினாலும் உடலில் பலத்த அடி ஏற்படும்.

இந்த விளையாட்டு மூலம் உடல் நிலை, மனநிலை மற்றும் சிந்தனை திறன் மேம்படும். இந்த ேபாட்டிக்கான உபகரணங்கள், பயிற்சி மையங்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பது மற்றும் மாணவர்களுக்கு இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பலர் இந்த விளையாட்டினை தேர்வு செய்ய முன் வருவார்கள். விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், என் நாட்டிற்காக உழைக்கவும் நான் என்னை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் திறமையான சமுதாயத்தை உருவாக்குவேன்’’ என்றார் பவஸ்ரீ.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post தமிழ்நாட்டில் திறமையான சமுதாயத்தை உருவாக்குவேன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kumkum Doshi Bhavasree ,Khosa Kulam ,Madurai ,New Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...